×

எஸ்.பி.பி மணிமண்டப பணி அடுத்த ஆண்டு தொடக்கம்: எஸ்.பி.பி.சரண் தகவல்

சென்னை: இந்திய சினிமாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருப்பவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நடிகர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என்று பல்வேறு தளங்களில் இயங்கிய அவர், கடந்த 2020 செப்டம்பர் 25ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக திடீரென்று மரணம் அடைந்தார். நேற்று எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 76வது பிறந்தநாள். இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் எஸ்.பி.பி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அஞ்சலி செலுத்திய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகனும், பாடகரும், நடிகருமான எஸ்.பி.பி.சரண் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘என் தந்தை எஸ்.பி.பியின் மறைவுக்குப் பின்பு, அவர் பாடிய பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறேன். அவரது நினைவை போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்து கிறேன். இந்நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் விரைவில் மணிமண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளேன். இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது. தற்போது மணிமண்டபத்தின் வடிவமைப்பு குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. நினைவிடமாக இல்லாமல், இயற்கையுடன் இணைந்து பல்வேறு அம்சங்களுடன் மணிமண்டபம் அமைக்கப்படும். இதை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும்’ என்றார்.

Tags : SBP ,SBP Charan Info , SBP Manimandapa work starts next year: SBP Charan Info
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்